பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

முதல் சுற்று வெற்றிக்கு பிறகு ஜோகோவிச் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), மார்டான் புசோவிக்ைச (ஹங்கேரி) சந்தித்தார். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 7-6 (2), 6-0, 6-3 என்ற நேர் செட்டில் புசோவிக்சை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக முதல் சுற்று வெற்றிக்கு பிறகு பேசிய ஜோகோவிச், 'கொசாவோ..., செர்பியாவின் இதயம் போன்றது. அங்கு நடக்கும் வன்முறையை நிறுத்துங்கள்' என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது. போட்டிகளில் அரசியல் ரீதியான கருத்துகளை சொல்வது விதிமீறல் என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொசாவோ டென்னிஸ் சங்கம் வலியுறுத்தியது. ஜோகோவிச்சின் செயலை பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சரும் கண்டித்தார். செர்பியாவில் இருந்து கொசாவோ பிரிந்து தனிநாடாக அறிவித்தாலும், அதை செர்பியா இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சலசலப்புக்கு மத்தியில் 2-வது சுற்றில் வெற்றி கண்ட ஜோகோவிச், கொசாவோ விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று உறுதிப்பட கூறினார். அடுத்து அவர் டேவிடோவிச் போகினாவுடன் (ஸ்பெயின்) மோதுகிறார்.

மற்றொரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே) 6-3, 6-2, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் இத்தாலி தகுதி நிலை வீரர் செப்பியரியை தோற்கடித்தார். ஹோல்ஜர் ருனே (டென்மார்க்), நிஷியாகோ (ஜப்பான்), கிரிகோர் டிமிட்ரோவ் (பல்கேரியா), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோரும் 3-வது சுற்றை எட்டினர்.


Next Story