பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் தட்டி சென்றார் ரபேல் நடால்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் வெற்றி பெற்று ரபேல் நடால் சாம்பியன் பட்டம் தட்டி சென்றுள்ளார்.
பாரீஸ்,
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர்.
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்தே நடால் புள்ளிகளை கைப்பற்றினார். இதனால், முதல் செட்டை 6-3 என்ற புள்ளி கணக்கில் தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து 2வது செட்டில் ரூட் அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் 3-1 என்ற புள்ளி கணக்கில் ரூட் முன்னிலையில் காணப்பட்டார். ஆனால், அதில் இருந்து மீண்டு வந்த நடால் 3 புள்ளிகளை கைப்பற்றி 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.
தொடர்ந்து முனைப்புடன் விளையாடி 2வது செட்டையும் 6-3 என்ற புள்ளி கணக்கில் நடால் கைப்பற்றினார். 3வது செட்டிலும் அவரது அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. அவர் ஒரு கட்டத்தில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். அடுத்தடுத்து புள்ளிகளை கைப்பற்றி 5-0 என முன்னேறி ரூட்டுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
எனினும், ஒரு புள்ளியை கூட ரூட் கைப்பற்ற முடியாமல் திணறினார். இந்நிலையில், போட்டியின் முடிவில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டமும் தட்டி சென்றுள்ளார். இது நடாலின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான 14வது வெற்றியாகும்.