பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 2-வது சுற்றில் எம்மா ரடுகானு தோல்வி
2-வது சுற்றிலே எம்மா ரடுகானு வெளியேறியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாரிஸ்,
ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
இந்த நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-வது சுற்று ஒன்றில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் முன்னணி வீராங்கனை எம்மா ரடுகானு, பெலாரஷ்ய வீராங்கனை அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சியை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச் 3-6, 6-1, 6-1 என்ற கணக்கில் எம்மா ரடுகானுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
19 வயதே ஆன எம்மா ரடுகானு கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்று பிரபலமானவர் . பிரெஞ்சு ஓபன் தொடரில் இவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 2-வது சுற்றிலே அவர் வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.