டேவிஸ் கோப்பை டென்னிஸ்: மொராக்கோவை வீழ்த்தியது இந்தியா
இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோ அணியை தோற்கடித்தது.
லக்னோ,
டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப்2 சுற்றில் இந்தியா-மொராக்கோ அணிகள் இடையிலான ஆட்டம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களில் சுமித் நாகல் வெற்றி பெற்றார். சசிகுமார் முகுந்த் காயத்தால் பாதியில் விலகினார்.
2-வது நாளான நேற்று இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ரோகன் போபண்ண- யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட்டில் மொராக்கோவின் பென்செட்ரிட்-யுனெஸ் லலாமி லாரோசி இணையை ஊதித்தள்ளியது.
இதைத் தொடர்ந்து நடந்த மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் யாசினே டிலிமியையும், இந்தியாவின் அறிமுக வீரராக இறங்கிய திக்விஜய் பிரதாப் சிங் 6-1, 5-7, 10-6 என்ற செட் கணக்கில் மொராக்கோவின் வேலிட் அஹோடாவையும் வீழ்த்தி அசத்தினர். முடிவில் இந்தியா 4-1 என்ற கணக்கில் மொராக்கோவை தோற்கடித்தது.