சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
சென்னை,
தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏ.டி.பி.சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 506-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சுமித் நாகல் 6-4, 6-4 என்ற நேர் செட்டில் 147-வது இடத்தில் உள்ள இங்கிலாந்தின் ரையான் பெனிஸ்டனுக்கு அதிர்ச்சி அளித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 54 நிமிடங்கள் நீடித்தது. அவர் அடுத்து ஜாசன் ஜங்கை எதிர்கொள்கிறார்.
'வைல்டு கார்டு' சலுகை மூலம் களம் கண்ட சுவீடன் வீரர் லியோ போர்க் 1-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஹமாட் மெட்ஜிடோவிச்சிடம் போராடி வீழ்ந்தார். கடுமையான வெயிலின் தாக்கமும் லியோ போர்க்குக்கு பாதகமாக அமைந்தது. லியோ போர்க்கின் ஆட்டத்தை அவரது தந்தையும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜான் போர்க் நேரில் பார்த்து ஊக்கப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-4, 3-6, 6-7 (4-7) என்ற செட் கணக்கில் ஜாய் கிளார்க்கிடமும் (இங்கிலாந்து), ராம்குமார் 3-6, 6-7 (3-7) என்ற நேர்செட்டில் டிமிதார் குஸ்மனோவிடமும் (பல்கேரியா), முகுந்த் சசிகுமார் 2-6, 2-6 என்ற நேர்செட்டில் மேக்ஸ் புர்செல்லிடமும் (ஆஸ்திரேலியா) தோற்று வெளியேறினர்.
தரவரிசையில் 138-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் டக்வொர்த் 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் கார்லோஸ் சாஞ்சஸ் ஜோவெர்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதேபோல் ஆஸ்திரேலியாவின் டேன் ஸ்வீனி 6-3, 6-4 என்ற நேர்செட்டில் பிரான்செஸ்கோ மாஸ்ட்ரெலியையும் (இத்தாலி), செக்குடியரசின் பீட்டர் நோய்ஜா 6-4, 7-5 என்ற நேர்செட்டில் லூகா நார்டியையும் (இத்தாலி), ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் மெக்காப் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் யூ ஹிசோவ் சூவையும் (சீனதைபே), செக்குடியரசின் டாலிபோர் சிர்சினா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அலிபெக் காச்மஜோவையும் (ரஷியா), சீனதைபே வீரர் ஜாசன் ஜங் 6-3, 1-6, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் ஹரோல்ட் மயோத்தையும் (பிரான்ஸ்) தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் கால்பதித்தனர்.
இந்த போட்டி தொடரில் இன்று இந்திய வீரர்கள் இரட்டையர் பிரிவில் களம் காணுகிறார்கள்.
இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல்-முகுந்த் சசிகுமார் ஜோடி யூ ஹிசோவ் சூ (சீன தைபே)-கிறிஸ்டோபர் ருங்காட் (இந்தோனேஷியா) இணையையும், ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் இணை, பிரடெரிகோ பெரீரா சில்வா (போர்ச்சுகல்)-நிகோலஸ் மொரினோ டி அல்போரான் (அமெரிக்கா) ஜோடியையும், ராம்குமார்-விஷ்ணு வர்தன் கூட்டணி தென் கொரியாவின் ஜி சுங் நாம்-மின்கு சோங் இணையையும் எதிர்கொள்கிறது.