சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: முதல் சுற்றில் சீன தைபே வீரர் வெற்றி


சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ்: முதல் சுற்றில் சீன தைபே வீரர் வெற்றி
x

கோப்புப்படம் 

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் சீனதைபே வீரர் சுன் சின் செங் வெற்றி பெற்றார்.

சென்னை,

சென்னை ஓபன் டென்னிஸ்

தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏ.டி.பி.சேலஞ்சர் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மொத்தம் ரூ.1.06 கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 132-வது இடத்தில் இருக்கும் சீன தைபே வீரர் சுன் சின் செங் 6-4, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் குரோஷியாவின் நினோ செர்டாருசிச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா வீரர் சியோங் சான் ஹாங் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் அப்னெரை வீழ்த்தினார்.

பிரான்ஸ் வீரர் வெற்றி

இன்னொரு ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் அர்தூர் கஜாஸ் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் வியட்நாமின் நாம் ஹாங் லியை விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதேபோல் அமெரிக்க வீரர் நிகோலஸ் மொரினோ டி அல்போரன் 6-3, 6-2 என்ற நேர்செட்டில் போர்ச்சுகலின் பிரடெரிகோ பெரீரா சில்வாவை வெளியேற்றினார். ஜப்பான் வீரர் யாசுதகா சியமா 6-4, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மான்சை சாய்த்தார்.

முன்னதாக காலையில் நடந்த தகுதி சுற்றின் இறுதி ரவுண்டில் முகுந்த் சசிகுமார் 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து சீனதைபேயின் ஜாசன் ஜங்க்கை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் சுமித் நாகல் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் ஜிசங் நாமை தோற்கடித்து பிரதான சுற்றை எட்டினார். இன்னொரு இந்திய வீரர் திக்விஜய் பிரதாப் சிங் 2-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் மெக்கேப்பிடம் வீழ்ந்து பிரதான சுற்று வாய்ப்பை இழந்தார்.

இன்றைய ஆட்டங்கள்

இந்த போட்டி தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் லியோ போர்க் (சுவீடன்)-ஹமாட் மெட்ஜிடோவிச் (செர்பியா), பிரஜ்னேஷ் குணேஸ்வரன் (இந்தியா)-ஜாய் கிளார்க் (இங்கிலாந்து), முகுந்த் சசிகுமார் (இந்தியா) மேக்ஸ் புர்செல் (ஆஸ்திரேலியா), சுமித் நாகல் (இந்தியா)-ரையான் பெனிஸ்டன் (இங்கிலாந்து) ஆகியோர் மோதுகின்றனர். போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.


Next Story