ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வி, வெளியேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; நடப்பு சாம்பியன் நடால் அதிர்ச்சி தோல்வி, வெளியேற்றம்
x

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.



மெல்போர்ன்,


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடந்து வருகிறது. வரும் 29-ந்தேதி வரை பல சுற்றுகள் கொண்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த போட்டியின் தொடக்க ஆட்டம் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் நடந்தது. ஆட்டத்தின்போது, நடப்பு சாம்பியனான ரபேல் நடால், தனது விருப்பத்திற்குரிய பேட் காணாமல் போய் விட்டது என்றும் பந்து எடுத்து போடும் சிறுவன் அதனை எடுத்து சென்று விட்டான் எனவும் புகாராக கூறியது பரபரப்பு ஏற்படுத்தியது.

எனினும், வேறொரு பேட்டை பயன்படுத்தி நடால் விளையாடினார். இந்த போட்டியில், ஜாக் டிரேபருக்கு எதிராக கடுமையாக போராடி 7-5, 2-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மூன்றரை மணிநேரம் நீடித்த இந்த போட்டியில் பெற்ற வெற்றியானது, நடப்பு ஆண்டில் நடாலுக்கு கிடைத்த முதல் வெற்றி ஆகும். இதனை தொடர்ந்து, இன்று நடந்த 2-வது சுற்று போட்டியில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டு என்பவருக்கு எதிராக விளையாடினார்.

ஆனால், தொடக்கத்தில் இருந்தே போட்டியின் தாக்கம் மெக்கன்சியின் பக்கம் இருந்தது. தரவரிசையில் 63-வது இடத்தில் உள்ள மெக்கன்சி அதிரடியாக சர்வீஸ் செய்து முதல் செட்டை எளிதில் கைப்பற்றினார்.

23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறுவதற்கான முயற்சியில் இருந்த நடால், அடுத்த செட்டையும் தவற விட்டார். இதனால், அடுத்தடுத்த செட்களை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்.

ஆனால், அதற்கு இடம் தராமல் மெக்கன்சி அதிரடி விளையாட்டை வெளிப்படுத்தினார். இதனால், 3-வது செட்டையும் தனவசப்படுத்தினார். 2 மணிநேரம் மற்றும் 32 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 4-6, 4-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் நடாலை வீழ்த்தி அமெரிக்க வீரர் மெக்கன்சி வெற்றி பெற்றார்.

போட்டியின்போது, நடாலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டார். இதனால், அவரால் சரியான முறையில் ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது. போட்டியில் இருந்து நடால் வெளியேறிய நிலையில், அவரது கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான கனவு தகர்ந்து போனது.



Next Story