ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டி மினாரை போராடி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ஆண்ட்ரே ரூப்லெவ்
இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார்.
மெல்போர்ன்,
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. பல முன்னணி வீரர்,வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி, வருகிற 28-ந்தேதி வரை நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதில் கைப்பற்றிய ரூப்லெவ் அடுத்த இரு செட்டில் 6-7(5-7), 6-7(4-7) என்ற புள்ளிக்கணக்கில் வீழ்ந்தார். இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 4வது செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் ரூப்லெவ் கைப்பற்றினார்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் அபாரமாக செயல்பட்ட ரூப்லெவ் 6-0 என்ற புள்ளிக்கணக்கில் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ரூப்லெவ் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை எதிர்கொள்ள உள்ளார்.