தொடருமா தங்க பதக்க வேட்டை...! : பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியை குறிவைக்கும் இந்திய இளம் வீராங்கனை


தொடருமா தங்க பதக்க வேட்டை...! : பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியை குறிவைக்கும் இந்திய இளம் வீராங்கனை
x
தினத்தந்தி 11 Nov 2021 4:32 PM IST (Updated: 11 Nov 2021 4:32 PM IST)
t-max-icont-min-icon

மனு பாக்கர் தனது 16 வயதில் 2018 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தங்க பதக்கம் வென்றதன் மூலம் நாட்டின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

டெல்லி , 

அரியானா மாநிலத்தை சேர்ந்த 19 வயது இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர். இந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நேற்று வரை நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 6 தங்க பதக்கம் வென்றுள்ளார்.  2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய நாட்டின் தங்க நாயகியாக மனு பாக்கர் மிளிர்வார் என விளையாட்டு ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடத்தப்படும் பிரெசிடெண்ட் கோப்பை துப்பாக்கிசூடுதல் போட்டி போலாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது.இந்த தொடரின் இறுதி நாளான நேற்று  25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் தங்க பதக்கம் வென்றார். 

ஏற்கனவே நடந்த  10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணியிலும் தங்க பதக்கம் வென்று இருந்த மனு பாக்கர் மேலும் ஒரு தங்க பதக்கம் வென்றுள்ளார்.இதை தவிர இந்திய அணியின் ராஹி சார்னோபட் மற்றும் சவுரப் சவுத்ரி தலா ஒரு வெள்ளி பதக்கம் வென்றனர் . இந்திய அணியின் அபிஷேக் வர்மா வெண்கல பதக்கம் வென்றார். 

அக்டோபர் மாதம் நடைபெற்ற ஜூனியர் துப்பாக்கிசூடுதல் உலகக்கோப்பை போட்டியில் மனு பாக்கர் 4 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் வென்று இருந்தார்.மனு பாக்கர் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 சர்வதேச தங்க பதக்கம் வென்றுள்ளார்.

மனு தனது 16 வயதில் 2018 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்  பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில்  தங்க பதக்கம் வென்றதன் மூலம் நாட்டின் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

அதே ஆண்டில் நடைபெற்ற  இளையவர் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இந்தியக் கொடியை ஏந்திய பெருமையும் மனு பாக்கரயே சாரும். இளையவர்  ஒலிம்பிக்கில்  பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாக்கர் 236.5 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இளையவர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் பெண் தடகள வீரராகவும் மனு திகழ்கிறார்.

அதற்கு முன் 2017 ஆம் ஆண்டு நடந்த ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று  சர்வதேச அளவில் தனது வெற்றி வருகையை  பதிவு செய்தார். 2017 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இவர்  9 தங்கப் பதக்கங்களை வென்றார்.

இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட மனு பாக்கர் தான் பங்கேற்ற 3 பிரிவுகளிலும் பதக்கம் வெல்லாமல் ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் அதன் பிறகு  6 சர்வதேச தங்க பதக்கங்கள் பெற்றுள்ள அவர் 2024 ஆண்டு நடைபெறும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில்  இந்தியாவிற்கு தங்க பதக்கம் பெற்று தர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Next Story