இந்திய மல்யுத்த கூட்டமைப்பு - தற்காலிக குழு அமைப்பு..!


இந்திய மல்யுத்த கூட்டமைப்பு - தற்காலிக குழு அமைப்பு..!
x

இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டி முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.

இதற்கிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா ஆகியோர் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்து வலியுறுத்தினர். அதேவேளை, பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.

பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 உறுப்பினர்களை கொண்ட தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. இந்த தற்காலிக குழுவின் தலைவராக பூபேந்தர் சிங் பஜ்வா, உறுப்பினர்களாக எம்.எம். சோமையா மற்றும் மஞ்சுஷா கன்வார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வீரர்கள் தேர்வு, விளையாட்டு போட்டிகளின் மேற்பார்வை மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவைகளை இக்குழு கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story