உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலம் வென்றார் வினேஷ் போகத்
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெண்கலம் வென்றார்.
பெல்கிரேடு,
17-வது உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் கடந்த 10-ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 53 கிலோ எடைப்பிரிவில் அரியானாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் இந்திய அணியில் இடம் பிடித்தார்.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவின் தகுதி சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை வினேஷ் போகத், மங்கோலியாவின் குலான் பட்குயாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே சற்று தடுமாற்றத்தை சந்தித்த வினேஷ் போகத் 0-7 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டார். பின்னர், குலான் பட்குயாக் இறுதிப் போட்டியை எட்டிய பிறகு, ரெபிசேஜ் சுற்றுக்கு வினேஷ் போகத் முன்னேறினார்.
ரெப்சேஜ் சுற்றில், வினேஷ் முதலில் கஜகஸ்தானின் எசிமோவாவை (Zhuldyz Eshimova) விக்டரி பை பால் (4-0) முடிவில் தோற்கடித்தார், பின்னர் அவரது எதிராளியான அஜர்பைஜானின் லேலா குர்பானோவா ( Leyla Gurbanova) காயம் காரணமாக வராததால் அந்த போட்டியில் வென்று, வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்களுக்கான 53 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் வெண்கலம் வென்றுள்ளார்.
ஸ்வீடனின் எம்மா ஜோனா மால்ம்கிரெனை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றுள்ளார்.