உலக டேபிள் டென்னிஸ்: இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றி
உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி, உஸ்பெகிஸ்தானை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
பூசன்,
உலக டேபிள் டென்னிஸ் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவின் பூசன் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 40 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக 'நாக்-அவுட்' (ரவுண்ட் 16) சுற்றுக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடம் பெறும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழையும்.
இதன் பெண்கள் பிரிவில் 'குரூப்1'-ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீனாவிடம் (2-3) தோற்றது. அடுத்த ஆட்டத்தில் ஹங்கேரியை (3-2) வீழ்த்தியது. இந்த நிலையில் நேற்று நடந்த தனது 3-வது ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 3-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானை தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்து தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது. ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் அர்ச்சனா காமத் 11-7, 11-3, 11-6 என்ற நேர்செட்டில் ரிமா கப்ரானோவையும், மணிகா பத்ரா 11-7, 11-4, 11-1 என்ற நேர்செட்டில் மார்காபோ மாக்டிவாவையும், தியா சிதாலே 11-6, 10-12, 11-4, 11-6 என்ற செட் கணக்கில் ரோஜாலினா காட்ஜிய்வாவையும் வீழ்த்தினர். இந்திய வீராங்கனைகள் அயிகா முகர்ஜி, ஸ்ரீஜா அகுலா ஆகியோருக்கு இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்பெயினை சந்திக்கிறது.