உலக செஸ் சாம்பியன்ஷிப்: 'பிடே' நிர்வாகிகள் சென்னையில் இன்று ஆய்வு


உலக செஸ் சாம்பியன்ஷிப்: பிடே நிர்வாகிகள் சென்னையில் இன்று ஆய்வு
x

கோப்புப்படம்

சென்னை, டெல்லி, சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் (பிடே) உரிமை கோரியுள்ளன.

சென்னை,

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கிறது. இதில் கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வாகை சூடிய தமிழக வீரர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுடன் மோதுகிறார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்கு சென்னை, டெல்லி, சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் சர்வதேச செஸ் சம்மேளனத்திடம் (பிடே) உரிமை கோரியுள்ளன. சென்னையில் நடத்த வாய்ப்பு கேட்டு, அரசின் அனுமதியுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விண்ணப்பித்துள்ளது. இவற்றில் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்பது இந்த மாத இறுதிக்குள் தெரிய வரும்.

இந்த நிலையில் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு கமிஷன் செயலாளர் கெர்மேன் கோரியேவா, தலைமை நிர்வாகி அன்ன வோல்கோவா ஆகியோர் சென்னையில் போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்ட நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தை இன்று ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். பின்னர் ஆய்வு விவரங்களை 'பிடே' யிடம் சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையிலேயே போட்டிக்கான இடம் இறுதி செய்யப்படும்.


Next Story