உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி - ஹங்கேரியில் இன்று தொடக்கம்
40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை 2 பதக்கம் மட்டுமே வென்றுள்ளது.
புடாபெஸ்ட்,
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. 27-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 2,100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். தடகளத்தின் உச்சக்கட்ட போட்டி என்பதால் இதில் பதக்கம் வெல்வது அவ்வளவு எளிதல்ல.
40 ஆண்டுகால உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியா இதுவரை 2 பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீஸ் உலக தடகளத்தில் நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலமும், கடந்த ஆண்டு போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த முறை இந்திய தரப்பில் 27 வீரர், வீராங்கனைகள் சென்றிருந்தாலும் ஒரே எதிர்பார்ப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மீதே உள்ளது. அவர் தங்கப்பதக்கம் வென்றால் துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் மகுடம் சூடிய 2-வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார்.
25 வயதான நீரஜ் சோப்ராவுக்கு செக்குடியரசின் ஜாகுப் வாட்லெஜ், ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர், நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள். கடந்த ஆண்டு உலக தடகளத்தில் 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, சுவீடனில் நடந்த டைமண்ட் லீக்கில் 89.94 மீட்டர் தூரம் வரை ஈட்டி வீசினார். 90 மீட்டர் இலக்கை அடைய தீவிரம் காட்டுகிறார். அதை அவர் அடைந்தால் நிச்சயம் பதக்கமேடையில் ஏறுவார் என்பதில் சந்தேகமில்லை.
'90 மீட்டர் இலக்கை எட்டுவதற்கு எனக்கு அற்புதமான ஒரு நாளுடன் சாதகமான சீதோஷ்ண நிலை அமைந்தால் போதும். நிச்சயம் அதை என்னால் எட்ட முடியும் என்று நம்புகிறேன்' என்று நீரஜ் குறிப்பிட்டார். ஈட்டி எறிதலில் 25-ந்தேதி தகுதி சுற்றும், 27-ந்தேதி இரவு பதக்கத்துக்கான இறுதி சுற்றும் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மற்றொரு எதிர்பார்ப்பு நிறைந்த பந்தயமான உலகின் அதிவேக மனிதர் யார்? என்பதை நிர்ணயிக்கும் 100 மீட்டர் ஓட்டம் நாளை இரவு அரங்கேறுகிறது. நடப்பு சாம்பியன் பிரெட் கெர்லி (அமெரிக்கா), இங்கிலாந்தின் ஜார்னெல் ஹூயூக்ஸ், கென்யாவின் பெர்டினன்ட் ஒமன்யாலா ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலக தடகளத்தில் 13 தங்கம் உள்பட 33 பதக்கங்களை அள்ளி முதலிடம் பிடித்த அமெரிக்கா இந்த தடவையும் வெகுவாக ஆதிக்கம் செலுத்தும் என்று தெரிகிறது. அமெரிக்கா அதிகபட்சமாக 138 வீரர், வீராங்கனைகளை களம் இறக்குகிறது.
முதல் நாளான இன்று 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் நடக்கிறது. மற்றபடி நீளம் தாண்டுதல், 1,500 மீட்டர் ஓட்டம், டிரிபிள் ஜம்ப் ஆகியவற்றில் தகுதி சுற்று நடக்கிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வருமாறு:-
பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்).
ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீ. ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீ. ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீ. தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் குமார் (3 பேரும் ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் ( 6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).