ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் இன்று தொடக்கம்: இந்திய வீரர்கள் சாதிப்பார்களா?
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது.
பாங்காக்,
24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று (புதன்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. அடுத்த மாதம் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த குண்டு எறிதல் வீரர் கரன்வீர் சிங், 400 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை அஞ்சலி தேவி ஆகியோர் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின், டிரிபிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஈட்டி எறிதல் வீரர் ரோகித் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகி இருப்பது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவாகும். அத்துடன் உலக தடகள போட்டிக்கு தயாராகி வருவதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
ஆண்கள் பிரிவில் நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர், நடப்பு சாம்பியனான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங், பெண்கள் பிரிவில் தேசிய சாதனையாளரான 100 மீட்டர் தடை ஓட்ட வீராங்கனை ஜோதி யர்ராஜி, ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) உள்ளிட்டோர் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த ஆசிய தடகள போட்டியில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று இருந்தது.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்புக்கான அதிகாரபூர்வ போட்டி சின்னமாக இந்து கடவுள்களில் ஒருவரான அனுமனின் உருவப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.