பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா பவுல் வீச காரணம் என்ன..? தேவேந்திர ஜஜாரியா விளக்கம்


பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் நீரஜ் சோப்ரா பவுல் வீச காரணம் என்ன..? தேவேந்திர ஜஜாரியா விளக்கம்
x

பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. இதில் அரங்கேறிய ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா தனது அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் வீசினார். ஆனால் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வியப்பூட்டும் வகையில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அதனை நீரஜ் சோப்ராவால் முந்த முடியவில்லை. முடிவில் 90 மீட்டர் தூரத்துக்கு மேல் வீசிய ஒரே வீரரான அர்ஷத் நதீம் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் நீரஜ் தனது கடைசி 4 வாய்ப்புகளில் பவுல் செய்தார். இருப்பினும் 2-வது முயற்சியிலேயே 89 மீட்டர் தூரத்தை கடந்ததால் வெள்ளி வென்றார்.

இந்நிலையில் நீரஜ் பவுல் செய்ததற்கான காரணம் குறித்து பாரா ஒலிம்பிக்கில் 3 முறை ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரும், இந்திய பாரா ஒலிம்பிக் குழுவின் தலைவருமான தேவேந்திர ஜஜாரியா விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததும் நீரஜ் சோப்ராவுக்கு அழுத்தம் கூடிவிட்டது. அவர் 93 மீட்டர் எறிய வேண்டும் என்ற இலக்குடன் இருந்தார். முதலிடத்தை பிடிப்பதற்காக அவர் எடுத்த கூடுதல் முயற்சிதான் பவுலில் முடிந்தது"என்று கூறினார்.


Next Story