இந்தியாவுக்கு தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த வீரரின் சோக பின்னணி...
சோகம் நிறைந்த கடந்த கால வாழ்க்கையை கடந்து வந்து உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளார் அமன் ஷெராவத்.
புதுடெல்லி,
ஸ்பெயின் நாட்டில் போன்டிவெத்ரா நகரில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், பிரீஸ்டைல் 57 கிலோ எடை பிரிவில், 18 வயதுடைய இந்திய வீரர் அமன் ஷெராவத் மற்றும் துருக்கியின் அகமத் துமன் ஆகியோர் விளையாடினர்.
இதில், 12-4 என்ற புள்ளி கணக்கில் துமனை வீழ்த்தி இந்திய வீரர் அமன் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அமன் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியா மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா ஆகியோர், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
அந்த சாதனையை விட ஒரு பங்கு மேலே சென்று அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.
அமன் ஷெராவத் இறுதி போட்டிக்கு செல்வதற்கு முன்பு அவரது பயிற்சியாளர் லலித் குமார் ஊக்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவர் தொலைபேசி வழியே டெல்லியில் இருந்து தொடர்பு கொண்டு பேசும்போது, இறுதி போட்டிக்கு முன்னேறியதுடன் முடிந்து விடவில்லை. நீ தங்க பதக்கம் வெல்ல வேண்டும்.
உனக்கு முன்பு ஆறேழு இந்திய வீரர்கள் வெள்ளி பதக்கம் வென்று விட்டனர். தற்போது உன்னுடைய சொந்த விளையாட்டை நீ விளையாட வேண்டும் என கூறியுள்ளார். அதற்கேற்ப இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
ஆனால், அவரது கடந்த காலம் சோகங்கள் நிறைந்தது. இதுபற்றி லலித் கூறும்போது, 6 ஆண்டுகளுக்கு முன்பு, 12 வயதில் கண்கள் நிறைய கனவுகளுடன் டெல்லி சத்ராசல் ஸ்டேடியத்திற்கு பயிற்சிக்காக அமன் வந்துள்ளார்.
வீட்டை விட்டு பயிற்சிக்காக நீண்டகாலம் வெளியே வந்ததற்காக ஒரு சிலரை போல் கவலை கொள்பவர் அமன் இல்லை. அரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் பரோட் கிராமத்தில் வசித்து வந்தபோது, அமனின் தந்தை சோம்வீர், தனது மகனை சத்ராசல் ஸ்டேடியத்திற்கு பயிற்சிக்காக கொண்டு வந்து விட்டு உள்ளார்.
ஆனால், பயிற்சியில் சேர்ந்து ஓராண்டில் சோம்வீர் காலமானார். அதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அமனின் தாயார் கம்லேசும் மரணம் அடைந்து விட்டார். அதனால், சத்ராசல் ஸ்டேடியத்தில் அமனை பார்த்து செல்வதற்கு என யாரும் வருவதில்லை.
சத்ராசலில் பல குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை பயிற்சிக்காக விட்டு சென்றுள்ளனர். பயிற்சி பெறும் தங்களுடைய குழந்தைகள் சரிவிகித உணவு பெற வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்து பால், உணவு உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கொடுப்பது பெற்றோரின் வழக்கம்.
ஆனால், அமனுக்கு அதுபோன்று எதுவும் இல்லை என பயிற்சியாளர் லலித் கூறியுள்ளார். இதன்பின்பு, நாட்டின் சிறந்த பயிற்சியாளர்களை உருவாக்கிய சத்ராசல் ஸ்டேடியம் அமனின் வீடு என்றாகி விட்டது. அமன் கடும் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார்.
30 முறை ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சி செய்ய வேண்டுமெனில், அதனை 60 முறை செய்வார். 60 நிமிட பயிற்சி காலம் என்றால், அமன் 2 மணிநேரம் வரை கடுமையாக பயிற்சி எடுத்து கொள்வார்.
ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதனால், சரியான சரிவிகித உணவுக்கு தேவையான பணவசதி அமனிடம் கிடையாது என எங்களுக்கு தெரியும். அதனால், பயிற்சியாளர்களே பணவசதி ஏற்படுத்தி கொடுத்து தினசரி பால் வாங்க உதவினார்கள். கடுமையான பயிற்சியாளர் மற்றும் திறமைசாலி அமன் என எங்களுக்கு தெரியும். ஆதரவு மட்டுமே அமனுக்கு தேவை என லலித் கூறியுள்ளார்.
அதற்கேற்றாற்போல், 2017-ம் ஆண்டு பள்ளி அளவில் நடந்த தேசிய போட்டிகளில் அமன் தங்கம் வென்றுள்ளார். 2018-ம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றுள்ளார்.
அதன்பின் அடுத்த ஆண்டில், ஆசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கமும், உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் வென்றுள்ளார். சீராக வளர்ச்சி அடைந்த அமன் மூத்த மல்யுத்த வீரர்கள் மீது மதிப்பு வைத்திருப்பவர் ஆவார் என பயிற்சியாளர் லலித் கூறியுள்ளார்.