கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை தமிழகம் வென்றது
பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 41-32 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.
சென்னை,
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் மோடி போட்டியை தொடங்கி வைத்தார்.
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் தடகளம், கபடி, நீச்சல், கால்பந்து, ஆக்கி, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ் உள்பட 26 வகையான போட்டிகள் இடம் பெறுகின்றன. இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 5,630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டி தொடரில் முதல் தங்கப்பதக்கத்தை தமிழகம் கைப்பற்றி அசத்தியது. 2-வது நாளான நேற்று சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த யோகாசன போட்டியின் 'ரித்மிக்' ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்களான தேவேஷ்-சர்வேஷ் 127.89 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். இருவரும் காஞ்சீபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். மேற்கு வங்காளத்தின் அவ்ரஜிட் சாஹா-நில் சர்கார் ஜோடி 127.57 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், மராட்டியத்தின் குஷ் சரண் இங்கோலே-யாட்நேஷ் ரவீந்திரா வான்கடே இணை 127.20 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வாள்வீச்சு போட்டியில் ஆண்களுக்கான தனிநபர் 'எபீ' பிரிவின் இறுதி சுற்றில் தமிழக வீரர் அன்பிளஸ் கோவின் 15-11 என்ற புள்ளி கணக்கில் மணிப்பூரை சேர்ந்த ஜெனித்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். தமிழகம் வென்ற 2-வது தங்கம் இதுவாகும். தோல்வி கண்ட ஜெனித் வெள்ளிப்பதக்கமும், அரைஇறுதியில் தோற்ற அரியானாவின் தேவராஜ், பஞ்சாப்பின் அஸ்வினி சவ்ரியா வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.
பெண்கள் கபடி போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள தமிழக அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 41-32 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. இதேபோல் ஆண்கள் கபடி போட்டியில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 39-36 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை சாய்த்து அரைஇறுதியை எட்டியது.