தமிழ்நாடு கைப்பந்து லீக்: சென்னை அணி 'சாம்பியன்'


தமிழ்நாடு கைப்பந்து லீக்: சென்னை அணி சாம்பியன்
x

வாகை சூடிய சென்னை அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.

சென்னை,

தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் கடலூர் வித் அஸ் மற்றும் சென்னை ராக்ஸ்டார்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை- கடலூர் அணிகள் சந்தித்தன. இதில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய சென்னை அணி 21-17, 21-16, 21-19 என்ற நேர் செட்டில் கடலூரை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது. முந்தைய லீக்கில் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டது.

வாகை சூடிய சென்னை அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடம் பிடித்த கடலூர் அணிக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடத்தை பெற்ற விருதுநகர் கிங் மேக்கர்ஸ் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசுத்தொகையாக கிடைத்தது. இறுதி ஆட்டத்தின் சிறந்த வீரர் விருதுடன் ரூ.5 ஆயிரத்தை சென்னை வீரர் சுரேந்தர் தட்டிச் சென்றார்.

தொடரின் சிறந்த செட்டராக ஓம் வசந்த் (கடலூர்), களத்தின் பின்பகுதியில் இருந்து ஷாட் அடித்ததில் சிறந்த வீரராக நந்தகோபால் (விருதுநகர்), சிறந்த பிளாக்கராக பிரின்ஸ் (சென்னை), சிறந்த எதிர்தாக்குதல் ஆட்டக்காரராக ஜெரோம் வினித் (கடலூர்), சிறந்த லிபரோவாக ராமநாதன் (கடலூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் தொடரின் மதிப்புமிக்க வீரராக சென்னை கேப்டன் உக்கிரபாண்டியன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

பரிசுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். விழாவில் அமைச்சர் சி.வி.கணேசன், தயாநிதி மாறன் எம்.பி., தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, தலைமை புரவலர் எஸ்.என்.ஜெயமுருகன், பொருளாளர் எம்.பி.செல்வகணேஷ், போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் ஆர்.கே.துரைசிங், ஏ.பழனியப்பன், எஸ்.தட்சிணாமூர்த்தி, பி.கலைசெல்வன், சி.ஸ்ரீகேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story