தமிழ்நாடு கைப்பந்து லீக்: இறுதிப்போட்டியில் சென்னை ராக்ஸ்டார்ஸ் - கடலூர் அணிகள் இன்று மோதல்


தமிழ்நாடு கைப்பந்து லீக்: இறுதிப்போட்டியில் சென்னை ராக்ஸ்டார்ஸ் - கடலூர் அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம் 

நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்றில் சென்னை ராக்ஸ்டார்ஸ், விருதுநகர் கிங் மேக்கர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

சென்னை,

6 அணிகள் இடையிலான முதலாவது தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்) சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டம் முடிவில் 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த கடலூர் வித் அஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

சென்னை ராக்ஸ்டார்ஸ் 2-வது இடமும், விருதுநகர் கிங் மேக்கர்ஸ் 3-வது இடமும் பிடித்து நாக்-அவுட் சுற்றை எட்டின. கிருஷ்ணகிரி புல்ஸ், குமரி போனிக்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் அணிகள் முறையே 4 முதல் 6 இடங்களை பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறின.

இந்த நிலையில் நேற்று நடந்த வெளியேற்றுதல் சுற்றில் சென்னை ராக்ஸ்டார்ஸ் - விருதுநகர் கிங் மேக்கர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ் 21-18, 21-15, 21-16 என்ற நேர்செட்டில் விருதுநகர் கிங் மேக்கர்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சிறந்த வீரருக்கான ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசை சந்தோஷ் (சென்னை) தட்டிச் சென்றார்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் கடலூர் வித் அஸ்-சென்னை ராக்ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story