ஆசிய வாள்வீச்சு போட்டியில் வரலாறு படைத்த தமிழக வீராங்கனை


ஆசிய வாள்வீச்சு போட்டியில் வரலாறு படைத்த தமிழக வீராங்கனை
x

புதிய சரித்திரம் படைத்த பவானி தேவிக்கு, இந்திய வாள்வீச்சு சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

புதுடெல்லி,

ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் வுசியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான சாப்ரே பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை பவானி தேவி, கஜகஸ்தானின் ஜாய்னாப் டேய்பெககோவாவை சந்தித்தார். திரில்லிங்கான இந்த மோதலில் சென்னையை சேர்ந்த பவானி தேவி 14-15 என்ற புள்ளி கணக்கில் ஜாய்னாப்பிடம் போராடி வீழ்ந்தார். இருப்பினும் அரைஇறுதிக்கு முன்னேறியதால் அவருக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது.

இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை 29 வயதான பவானி தேவி படைத்தார். முன்னதாக அவர் கால்இறுதியில் உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான மிசாகி எமுராவை (ஜப்பான்) 15-10 என்ற புள்ளி கணக்கில் சாய்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 4-வது முறையாக மிசாகியை எதிர்கொண்ட அவர் அதில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

புதிய சரித்திரம் படைத்த பவானி தேவிக்கு, இந்திய வாள்வீச்சு சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அவர் கூறுகையில், 'இது இந்திய வாள்வீச்சுக்கு பெருமைக்குரிய நாளாகும். இதற்கு முன்பு யாரும் செய்யாததை பவானி தேவி சாதித்து இருக்கிறார். பெருமைக்குரிய ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள. அவருக்கு ஒட்டுமொத்த வாள்வீச்சு சமூகத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அடுத்த முறை அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என்று நம்புகிறேன்' என்றார்.


Next Story