சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் சீன தைபேயிடம் 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
சூசோ,
18-வது சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவில் உள்ள சூசோ நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் வலுவான சீன தைபேயை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரதீக்-தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-18, 24-26, 6-21 என்ற செட் கணக்கில் யாங் போ ஹூசன், ஹூ லிங் பாங் (சீன தைபே) இணையிடம் போராடி வீழ்ந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 19-21, 15-21 என்ற நேர்செட்டில் சோ டின் சென்னிடம் தோல்வி கண்டார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-21, 21-18, 17-21 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை தாய் சூ யிங்கிடம் பணிந்தார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை 13-21, 21-17, 18-21 என்ற செட் கணக்கில் லீ யாங்-யி ஹாங் ஜோடியிடம் வீழ்ந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 15-21, 21-18, 21-13 என்ற செட் கணக்கில் லீ சியா ஹின்-டெங் சுன் சன் இணையை சாய்த்தது.
இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது. மலேசிய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்து இருந்தது.