மாநில நீச்சல் போட்டி - நெல்லை, மதுரை வீரர்கள் சாதனை
நெல்லை வீரர் பெனடிக்டன் ரோகித் 55.83 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார்.
சென்னை,
77-வது சீனியர் மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆண்களுக்கான 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் டி.டி.எஸ்.ஏ அணி வீரர் (நெல்லை) பெனடிக்டன் ரோகித் 55.83 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய சாதனை படைத்தார். முன்னதாக டி.எஸ்.பி.ஏ. வீரர் ஆதித்யா கடந்த ஆண்டு இந்த பந்தயத்தில் 56.93 வினாடியில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. இதனை தற்போது பெனடிக்டன் முறியடித்துள்ளார்.
இதே போல் 50 மீட்டர் பட்டர்பிளை நீச்சலில் பெனடிக்டன் 24.84 வினாடிகளில் பந்தயதூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். அக்வாடிக் (மதுரை) அணி வீரர் பி.விகாஷ், 50 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் 23.10 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனையோடு முதலிடத்தை பிடித்தார்.
பெண்களுக்கான 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் எஸ்.டி.ஏ.டி. (சென்னை) வீராங்கனை பிரமிதி 2 நிமிடம் 34.56 வினாடிகளில் முதலாவதாக நீந்தி வந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.