மாநில கூடைப்பந்து: இந்தியன் வங்கி, ரைசிங் ஸ்டார் அணிகள் 'சாம்பியன்'
ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி 81-78 என்ற புள்ளி கணக்கில் கடைசி லீக் ஆட்டத்தில் வருமான வரி அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சென்னை,
மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து கிளப் சார்பில் 19-வது மாநில கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூர் வெங்கு தெருவில் உள்ள மாநகராட்சி திடலில் ஒரு வாரம் நடந்தது. மொத்தம் 60 அணிகள் பங்கேற்றன. இதில் பெண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் ரைசிங் ஸ்டார் அணி 85-66 என்ற புள்ளி கணக்கில் எஸ்.பி.சி. அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 41-25 என்ற புள்ளி கணக்கில் ஜே.ஐ.டி. அணியை தோற்கடித்தது.
ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி 81-78 என்ற புள்ளி கணக்கில் கடைசி லீக் ஆட்டத்தில் வருமான வரி அணியை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. வருமான வரி அணி 2-வது இடத்தையும், ஐ.சி.எப். 3-வது இடத்தையும், லயோலா 4-வது இடத்தையும் பெற்றன. பரிசளிப்பு விழாவுக்கு அமெட் பல்கலைக்கழக வேந்தர் நாசே.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக வருகை தந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். போட்டி அமைப்பாளர்கள் ஏ.எம். செல்வராஜ், கே.எத்திராஜ், மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் தலைவர் எம்.எம்.டி.ஏ.கோபி, பொதுச்செயலாளர் எம். கனகசுந்தரம் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.