குண்டு எறிதல் வீரர் கரன்வீர் சிங் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் - ஆசிய தடகள போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கம்
ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்ததையடுத்து கரன்வீர் சிங் இந்திய தடகள அணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வருகிற 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 54 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த குண்டு எறிதல் வீரர் கரன்வீர் சிங்கிடம் போட்டி இல்லாத சமயத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து 25 வயதான பஞ்சாப்பை சேர்ந்த கரன்வீர் சிங் இந்திய தடகள அணியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் குண்டு எறிதலில் இந்தியா சார்பில் தஜிந்தர் பால்சிங் மட்டும் கலந்து கொள்கிறார்.
கடந்த மே மாதம் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியில் 19.05 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து இந்திய அணிக்கு தேர்வான கரன்வீர் சிங் எந்த வகையான ஊக்கமருந்தை பயன்படுத்தினார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.