உலக தடகள 100 மீட்டர் ஓட்டம்: ஜமைக்கா வீராங்கனை பிரேசர் 5-வது முறையாக 'சாம்பியன்'
உலக தடகளத்தில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை பிரேசர் 5-வது முறையாக சாம்பியன் ஆனார்.
யூஜின்,
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் உலகின் அதிவேக வீராங்கனை யார்? என்பதை நிர்ணயிக்கும் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் இறுதி சுற்று இந்திய நேரப்படி நேற்று காலை அங்கு நடந்தது. இலக்கை நோக்கி 8 வீராங்கனைகள் ராக்கெட் வேகத்தில் பாய்ந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்து ரசிகர்களை சிலிர்க்க வைத்த இந்த ஓட்டத்தில் எதிர்பார்த்தபடியே டாப்-3 இடங்களை ஜமைக்கா வீராங்கனைகள் ஆக்கிரமித்தனர்.
ஜமைக்காவின் ஷெல்லி அன் பிரேசர்-பிரைஸ் 10.67 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். சக நாட்டவர்களான ஷெரிகா ஜாக்சன் வெள்ளிப்பதக்கமும் (10.73 வினாடி), ஒலிம்பிக் சாம்பியனான எலானி தாம்சன் ஹெரா வெண்கலப்பதக்கமும் (10.81 வினாடி) பெற்றனர். இங்கிலாந்தின் டினா ஆஷர் சுமித் 4-வது இடத்துக்கு (10.83 வினாடி) தள்ளப்பட்டார்.
5-வது முறையாக....
35 வயதான ஷெல்லி அன் பிரேசர் உலக தடகளத்தின் 100 மீட்டர் ஓட்டத்தில் அறுவடை செய்த 5-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே 2009, 2013, 2015, 2019-ம் ஆண்டுகளிலும் வாகை சூடியுள்ளார். இதன் மூலம் உலக தடகளத்தில் தனிநபர் ஓட்டத்தில் 5 தங்கம் வென்ற முதல் நபர் என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
ஷெல்லி அன் பிரேசர் கூறுகையில், 'எனது வாழ்க்கையில் பல பின்னடைவுகளை சந்தித்துள்ளேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அதில் இருந்து மீண்டு வந்து விடுகிறேன். எனக்குள் உள்ள திறமையை கொண்டு 35 வயதிலும், அதுவும் குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து சாதிப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன். புதிய பயணத்தை தொடங்கும் வீராங்கனைகளுக்கு நான் உந்து சக்தியாக இருப்பதாக நம்புகிறேன்' என்றார்.
பதக்கப்பட்டியலில் அமெரிக்கா ஆதிக்கம்
சங்கிலி குண்டு எறிதலில் அமெரிக்க வீராங்கனை புரூக் ஆண்டர்சனும் (78.96 மீட்டர்), 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உகாண்டா வீராங்கனை ஜோஷூவா செப்டேஜியும் (27 நிமிடம் 27.43 வினாடி), கம்பூன்றி உயரம் தாண்டுதலில் (போல்வால்ட்) அமெரிக்க வீராங்கனை கேட்டி நேகியாட்டும் (4.85 மீட்டர் உயரம்), ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்டத்தில் அமெரிக்காவின் கிரான்ட் ஹாலோவேவும் (13.03 வினாடி), குண்டுஎறிதலில் ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்க வீரர் ரையன் குரோசரும் (22.94 மீட்டர் தூரம்) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
3-வது நாள் முடிவில் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா 6 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என்று மொத்தம் 14 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. எத்தியோப்பியா 2 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது.