பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த சம்மேளன தலைவர் மீது நடவடிக்கை இல்லை?
பிரிஜ் பூஷன் சரண் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளால் உறுதியான ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இது குறித்து விசாரிக்க மேரிகோம் தலைமையில் 6 பேர் கொண்ட கமிட்டியை மத்திய விளையாட்டு அமைச்சகம் அமைத்தது.
இந்த கமிட்டி விரிவான விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த வாரம் விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. அதன் விவரத்தை விளையாட்டு அமைச்சகம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் பிரிஜ் பூஷன் சரண் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளால் உறுதியான ஆதாரத்துடன் நிரூபிக்க முடியவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு பல்கேரியாவில் நடந்த போட்டியின் போது பிரிஜ் பூஷன் தனது முதுகுவலிக்கு மசாஜ் செய்யும்படி வற்புறுத்தியதாக கூறிய பெண் உடல்தகுதி நிபுணர், தற்போது அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார். மற்ற புகார்களிலும் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று தெரிகிறது.