பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்; பிரிஜ் பூஷணை கைது செய்ய போதிய சான்றுகள் இல்லை: டெல்லி போலீசார்


பாலியல் குற்றச்சாட்டு விவகாரம்; பிரிஜ் பூஷணை கைது செய்ய போதிய சான்றுகள் இல்லை: டெல்லி போலீசார்
x

பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய இதுவரை போதிய சான்றுகள் இல்லை என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக 12 ஆண்டுகளாக பதவி வகிக்கும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இதுபற்றி, இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி. உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும் மற்றும் அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. எனினும், இதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வரும் சரண் சிங்குக்கு எதிராக 3 மாதங்களுக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது.

அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்து, போராட்டம் நடைபெறும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருகை தந்து, அவர்களுக்கு தங்களது ஆதரவை வழங்கினர்.

போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

பிரிஜ் பூஷண் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார் என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்தனர். நாடாளுமன்றம் நோக்கிய அவர்களது பேரணியின்போது, டெல்லி போலீசார் கைது செய்து, இழுத்து சென்றது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச போகிறோம் என கூறி அவர்கள் சென்றனர். பின்னர், விவசாய சங்க தலைவர் திகாயத் தலையிட்டு, 5 நாள் காத்திருக்கும்படி கேட்டு கொண்டார்.

இந்நிலையில், டெல்லி போலீசார் தரப்பில் இன்று வெளியிட்ட செய்தியில், எங்களது அறிக்கை இன்னும் 15 நாட்களில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அது குற்றப்பத்திரிகையாகவோ அல்லது இறுதி அறிக்கையாகவோ கூட இருக்கும் என தெரிவித்து உள்ளது.

எப்.ஐ.ஆர். பதிவில் சேர்க்கப்பட்ட போக்சோ பிரிவால், 7 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனை விதிக்கவே வழியுள்ளது. அதனால், பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்துவது போல், விசாரணை அதிகாரிகளால் கைது நடவடிக்கை எடுக்க முடியாது.

குற்றச்சாட்டுக்கு ஆளானவர், சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தவோ, சான்றுகளை அளிக்கவோ இல்லை என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கூறும் விசயங்களை நிரூபிக்க போதிய சான்றுகள் இதுவரை இல்லை என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.


Next Story