பாலியல் விவகாரம்; ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் தூக்கில் தொங்க தயார்: பிரிஜ் பூஷண் சரண் சிங்


பாலியல் விவகாரம்; ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் தூக்கில் தொங்க தயார்: பிரிஜ் பூஷண் சரண் சிங்
x

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் தூக்கில் தொங்க தயார் என பிரிஜ் பூஷண் சரண் சிங் புதிய வீடியோவில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் 3 மாதங்களுக்கு பின்னர், மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்கள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின்போது, சமீபத்தில் குடிபோதையில் டெல்லி போலீசார் அவர்களை தாக்கினர் என குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், இதனை போலீசார் மறுத்தனர். சுப்ரீம் கோர்ட்டில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் தொடுத்த வழக்கு விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி, அந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.

எனினும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் தொடரும். அனைத்து வாய்ப்புகளையும் வெளிப்படையாகவே நாங்கள் வைத்திருக்கிறோம். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் என கூறினர். டெல்லியில், இன்று இரவு 7 மணியளவில், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி செல்லவும் அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், பிரிஜ் பூஷண் சரண் சிங் இன்று வெளியிட்ட புதிய வீடியோ ஒன்றில், எனக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும் கூட தூக்கில் தொங்க தயார். இந்த விவகாரம் டெல்லி போலீசிடம் உள்ளது. அதனால், இதுபற்றி அதிகம் நான் பேச முடியாது.

எனக்கு எதிராக ஏதேனும் வீடியோ, சான்றுகள் என இந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வைத்திருக்கிறார்களா? என முதல் நாளில் இருந்து நான் கூறி வருகிறேன். இந்த மல்யுத்த விளையாட்டுடன் தொடர்புடைய யாரை வேண்டுமென்றாலும் நீங்கள் கேட்டு பாருங்கள். பிரிஷ் பூஷண் ராவணனா என்று...? என அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் பிரிஜ் பூஷணுக்கு எதிரான போராட்டத்தில், கீர்த்தி கிசான் யூனியனை சேர்ந்த உறுப்பினர்கள் இன்று கலந்து கொண்டனர். சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைவர் ராகேஷ் திகாயத் போராட்டத்திற்கு ஆதரவாக ஜந்தர் மந்தருக்கு செல்வதற்கு முன்பு, பிரிஜ் பூஷண் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறினார்.


Next Story