பிரைம் கைப்பந்து லீக் போட்டி: சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக நவீன் ராஜா ஜேக்கப் நியமனம்
பிரைம் கைப்பந்து லீக் போட்டிக்கான சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
பெங்களூரு தோர்பிடோஸ், கொல்கத்தா தண்டர்போல்ட்ஸ், மும்பை மெட்டியோர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், ஆமதாபாத் டிபன்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாவ்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், சென்னை பிளிட்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் 2-வது பிரைம் கைப்பந்து லீக் போட்டி பெங்களூருவில் வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது.
இதைத்தொடர்ந்து ஐதராபாத் மற்றும் கொச்சியில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோத வேண்டும். லீ சுற்று முடிவில் 'டாப்-4' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி கொச்சியில் மார்ச் 5-ந் தேதி நடக்கிறது.
பெங்களூருவில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வருகிற 7-ந் தேதி கொச்சியை சந்திக்கிறது. தினசரி முதல் ஆட்டம் இரவு 7 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 9.30 மணிக்கும் தொடங்குகிறது.
இந்த போட்டியில் களம் இறங்கும்சென்னை பிளிட்ஸ் அணியின் சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சென்னை அணியின் உரிமையாளர்கள் விக்ராந்த் ரெட்டி, ஹனிமி ரெட்டி, தலைமை செயல் அதிகாரி கிரண்குமார், தலைமை டெக்னிக்கல் அதிகாரி துளசி ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு சீருடையையும், அணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைத்தனர். அத்துடன் சென்னை அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த சர்வதேச வீரர் நவீன் ராஜா ஜேக்கப் நியமிக்கப்பட்டு இருப்பதாக உரிமையாளர்கள் அறிவித்தனர்.
பின்னர் சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டன் நவீன் ராஜா ஜேக்கப் கூறுகையில், 'எங்கள் அணியில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் சரியான கலவையில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2 வாரமாக சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு போட்டிக்கு நன்றாக தயாராகி இருக்கிறோம். இந்த முறை நாங்கள் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறோம்' என்றார்.
சென்னை பிளிட்ஸ் அணி வீரர்கள் வருமாறு:-
அகீன் ஜாஸ், நவீன் ராஜா ஜேக்கப் (கேப்டன், தமிழ்நாடு), பினாமா பிரசாந்த், ஜோபின் வர்கீஸ், சீதா ராம ராஜூ, அஸ்வின், ராமநாதன், பிரசன்ன ராஜா, முகமது ரியாசுதீன் (4 பேரும் தமிழ்நாடு), துஷார் ராஜேந்திர லவாரி, ராமன்குமார், ரீனாடோ மென்டிஸ் ஜெர்வாசியோ (பிரேசில்), மோயோ ஆட்ரன் (கேமரூன்), அப்துல் முக்னி சிஷ்டி, தலைமை பயிற்சியாளர்: ரூபென் அட்ரியன் வோலோசின், பயிற்சியாளர்: சுப்பா ராவ், உதவி பயிற்சியாளர்கள்: ரமேஷ் மென்டிஜெரி, அனில்குமார், மானேஜர்: சபரி ராஜன்.