மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் போட்டோவுக்கு ஒன்றாக போஸ்... பாகிஸ்தான் வீரருக்கு குவியும் பாராட்டு


மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் போட்டோவுக்கு ஒன்றாக போஸ்... பாகிஸ்தான் வீரருக்கு குவியும் பாராட்டு
x

image courtesy; AFP

தினத்தந்தி 28 Aug 2023 1:18 PM IST (Updated: 28 Aug 2023 1:23 PM IST)
t-max-icont-min-icon

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.

புடாபெஸ்ட்,

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று, இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது.

எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை நிகழ்த்தி வரலாற்றில் தடம் பதித்தார். அவருக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (87.82 மீட்டர்) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

இறுதிப் போட்டிக்குப் பிறகு, நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் இருவரும் களத்தில் தங்களது தருணத்தைப் பகிர்ந்து கொண்டனர். அது சமூக ஊடகங்கள் முழுவதும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. நீரஜ் மற்றும் நதீம் களத்தில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவினர். அவர்களின் பிணைப்பு இந்தியா-பாகிஸ்தான் வேற்றுமைக்கு அப்பால் செல்கிறது.

இறுதிப் போட்டியின் முடிவில், நீரஜ் மைதானத்தில் புகைப்படம் எடுக்க நதீமை அழைத்தார். நதீம் உடனடியாக மூவர்ண கொடியை ஏந்திய நீரஜ் சோப்ராவுடன் நின்று புகைப்படம் எடுத்தார். அவர்களுடன் வெண்கலப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜும் நின்றார். நீரஜ் மற்றும் நதீம் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்த தருணம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. மூவர்ண கொடியுடன் புகைப்படம் எடுத்த பாகிஸ்தான் வீரரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


Next Story