பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!
பிரதமர் மோடி இன்று, பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, கடந்த மாதம் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள் மற்றும் தங்கம் வென்ற வீராங்கனை நிகத் ஸரீன் உள்ளிட்டோரை இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்தது. இதில் 52 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்.
தெலுங்கானாவை சேர்ந்த நிகத் ஸரீன் 25, கடந்த 2019-ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. நிகத் ஸரீன் பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற 5 வது வீராங்கனை ஆவார்.
மேலும் 57 கிலோ எடைப்பிரிவின் இந்திய வீராங்கனை மனிஷா வெண்கலம் வென்றார். மேலும் இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா 63 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.