பாரா ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்று அசத்திய இந்திய வீரர்கள்
இந்திய வீரர் ஹானே 55.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.
ஹாங்சோவ்,
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வாரி குவித்தனர். ஈட்டி எறிதலில் எப்.64 பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் சுமித் அன்டில் 73.29 தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். அத்துடன் தனது முந்தைய உலக சாதனையை (70.83 மீட்டர்) தகர்த்து புதிய சாதனையை படைத்தார்.
மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திர சிங் வெண்கலப்பதக்கம் (62.06 மீட்டர்) பெற்றார். அரியானாவைச் சேர்ந்த சுமித் அன்டில் 2015-ம் ஆண்டு நடந்த விபத்தில் இடது முட்டிக்கு கீழ் காலை இழந்தவர் ஆவார். இதே போல் இந்தியாவின் சுந்தர் சிங் குர்ஜார் ஈட்டி எறிதலில் எப்.46 பிரிவில் 68.60 மீட்டர் தூரம் வீசி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ரிங்கு, அஜீத் சிங் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர்.
தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் ஹானே, ஈட்டி எறிதலில் எப்.37/38 பிரிவில் 55.97 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்ததுடன், தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அன்குர் தாமா 4 நிமிடம் 27.70 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்த அன்குர் தாமா ஒரு ஆசிய விளையாட்டில் 2 தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் ரக்ஷிதா ராஜூ, கிலகா லலிதா தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினர்.
நேற்றைய முடிவில் இந்தியா 64 பதக்கத்துடன் (15 தங்கம், 20 வெள்ளி, 29 வெண்கலம்) 6-வது இடத்தில் இருக்கிறது. சீனா 118 தங்கம் உள்பட 300 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.