நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, வைஷாலி முதலிடம்


நார்வே செஸ் போட்டி: பிரக்ஞானந்தா, வைஷாலி முதலிடம்
x

நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி, உக்ரைனின் அன்னா முஸ்சிசுக்குடன் மோதினார்.

ஸ்டாவன்ஞர்,

12-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவன்ஞர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொருவரும், தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தமுள்ள 10 சுற்றுகள் முடிவில் முதல் இடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவர்.

ஒவ்வொரு சுற்றிலும் முதலில் கிளாசிக்கல் முறையில் மோத வேண்டும். கிளாசிக்கல் என்பது மெதுவாக ஆடக்கூடியதாகும். இதில் காய் நகர்த்தலுக்கு குறிப்பிட்ட அளவுக்கு கால அவகாசம் கொடுக்கப்படும். கிளாசிக்கல் முறை டிராவில் முடிந்தால், முடிவை அறிய ஆட்டம் அர்மாகேட்டன் முறைக்கு நகரும். குறைந்த நேரம் கொண்ட இந்த ஆட்டத்தில் வேகமாக காய்களை நகர்த்த வேண்டியது அவசியமானதாகும்.

இந்த தொடரில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் சென்னையை சேர்ந்த 18 வயது பிரக்ஞானந்தா, 5 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்செனை (நார்வே) சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 37-வது காய் நகர்த்தலில் கார்ல்செனை அவரது சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தினார். ஆன்லைன் மற்றும் ரேபிட் பிரிவு போட்டிகளில் கார்ல்செனை தோற்கடித்து இருந்த பிரக்ஞானந்தா கிளாசிக்கல் முறையில் அவரை வெல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு கிளாசிக்கல் பிரிவில் இருவரும் மோதிய 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்து இருந்தன.

முதல் சுற்றில் வெற்றியும், 2-வது சுற்றில் உலக சாம்பியன் டிங் லிரெனுடன் தோற்றும் இருந்த பிரக்ஞானந்தா இந்த வெற்றியின் மூலம் கிடைத்த 3 புள்ளியையும் சேர்த்து மொத்தம் 5½ புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். நடப்பு உலக சாம்பியன் டிங் லிரெனை (சீனா) முதல்முறையாக வீழ்த்திய பாபியானோ காருனா (அமெரிக்கா) 5 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளார். கார்ல்சென் (3 புள்ளி) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்கள் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஆர்.வைஷாலி, உக்ரைனின் அன்னா முஸ்சிசுக்குடன் மோதினார். இதில் வைஷாலி கருப்பு நிற காய்களுடன் ஆடினார். 50-வது காய் நகர்த்தலில் கிளாசிக்கல் ஆட்டம் டிராவில் முடிந்ததை தொடர்ந்து அர்மாகேட்டன் முறை அமலானது. இந்த ஆட்டம் 70-வது நகர்த்தலுக்கு பிறகு டிரா ஆனது. இருப்பினும் கருப்பு நிற காயுடன் ஆடிய வைஷாலிக்கு 1½ புள்ளியும், வெள்ளை நிற காயுடன் ஆடிய அன்னா முஸ்சிசுக்குக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டன.

இன்னும் 7 சுற்றுகள் மிஞ்சி இருக்கும் நிலையில் ஆர்.வைஷாலி 5½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். சீன வீராங்கனை வென்ஜூன் ஜூ 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். தற்போது இரு பிரிவிலும் இந்தியாவை சேர்ந்த அக்கா, தம்பியான வைஷாலி, பிரக்ஞானந்தா ஆகியோர் முதலிடத்தை அலங்கரிக்கின்றனர்.


Next Story