உலக தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய அணி பங்கேற்பு: 4 தமிழக வீரர்களுக்கு இடம்


உலக தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா தலைமையில் இந்திய அணி பங்கேற்பு: 4 தமிழக வீரர்களுக்கு இடம்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 9 Aug 2023 12:56 AM IST (Updated: 9 Aug 2023 3:10 PM IST)
t-max-icont-min-icon

ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது.

புதுடெல்லி,

19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியை, இந்திய தடகள சம்மேளனம் நேற்று அறிவித்தது. ஒலிம்பிக் சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தலைமையில் 28 பேர் கொண்ட இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்கிறது. ஆசிய சாதனையாளரான குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால்சிங் தூர் காயத்தில் இருந்து மீளாததால் அணியில் இடம்பெறவில்லை. தேசிய சாதனை படைத்த நீளம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனை சந்தா, 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தய வீராங்கனை பிரியங்கா கோஸ்வாமி ஆகியோர் ஆசிய விளையாட்டு போட்டியில் (செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை) கவனம் செலுத்தும் பொருட்டு இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கின்றனர். தமிழக வீரர்களான சந்தோஷ்குமார், பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ராஜேஷ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

பெண்கள்: ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), ஷைலி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்) பாவ்னா ஜாட் (20 கிலோ மீட்டர் நடைபந்தயம்).

ஆண்கள்: கிரிஷன் குமார் (800 மீட்டர் ஓட்டம்), அஜய்குமார் சரோஜ் (1,500 மீட்டர் ஓட்டம்), சந்தோஷ் குமார் (400 மீட்டர் தடைஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), சர்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்), ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்), பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர், எல்தோஸ் பால் (மூவரும் டிரிபிள் ஜம்ப்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), டி.பி.மானு (ஈட்டி எறிதல்), கிஷோர் குமார் (ஈட்டி எறிதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (மூவரும் 20 கிலோ மீட்டர் நடைபந்தயம்), ராம் பாபூ (35 கிலோ மீட்டர் நடைபந்தயம்), அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (6 பேரும் 400 மீட்டர் தொடர் ஓட்டம்).


Next Story