இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கம்


இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கம்
x

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) தலைவராக நரிந்தர் பத்ரா 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். ஆக்கி இந்தியா அமைப்பின் ஆயுட்கால உறுப்பினர் என்ற அடிப்படையில் அதன் பிரதிநிதியாக ஐ.ஓ.ஏ. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையே அவர் ஐ.ஓ.ஏ. தலைவராக நீடிப்பதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, 'ஆக்கி இந்தியா அமைப்பில் நரிந்தர் பத்ரா ஆயுட்கால உறுப்பினராக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது. தேசிய விளையாட்டு விதிமுறைக்குட்பட்டு அது இருக்கவில்லை' என்று நேற்று அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் ஆக்கி இந்தியா அமைப்பை நிர்வகிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியை அமைக்கவும் உத்தரவு பிறப்பித்தது. கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவியில் இருந்து நரிந்தர் பத்ரா நீக்கப்பட்டார். சீனியர் துணைத்தலைவர் அனில் கண்ணா பொறுப்பு தலைவராக இனி செயல்படுவார்.

இந்த நிலையில் நரிந்தர் பத்ரா வெளியிட்ட ஒரு அறிக்கையில் 'சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவராக இருக்கும் நான் புதிய வகை ஆக்கி போட்டிகள் மற்றும் ஆக்கி மேம்பாட்டுக்கு அதிக நேரம் செலவிட வேண்டி உள்ளது. எனவே இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் போது மீண்டும் தலைவர் பதவிக்கான போட்டியில் நான் இருக்கமாட்டேன். இந்திய விளையாட்டை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வதற்கு தேவையான புதிய சிந்தனை மற்றும் யோசனைகளுடன் வருபவருக்கு வழிவிடுவதற்கு இதுவே சரியான தருணம் என்று உணர்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதன் மூலம் நரிந்தர் பத்ரா சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story