மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்


மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
x

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இந்த போட்டியில் பங்கேற்கவில்லை.

கோலாலம்பூர்,

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வீரர், வீராங்கனைகள் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் தரவரிசையில் டாப்-16 இடங்களுக்கு இருக்க வேண்டியது அவசியமானதாகும். இதனால் இனி வரும் சர்வதேச போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் டென்மார்க்கின் ஆந்த்ரே அன்டோன்சென்னுடன் மோதுகிறார். கடந்த ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய 31 வயதான பிரனாய் புதிய ஆண்டை தித்திப்பாக தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் இந்திய வீரர்கள் லக்ஷயா சென், சீனாவின் விங் ஹாங் யங்கையும், ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியையும் சந்திக்கின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் முகமது சோபிபுல், பகாஸ் மவ்லானா இணையை எதிர்கொள்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் உள்பட பல்வேறு வெற்றிகளை குவித்து கடந்த ஆண்டு தரவரிசையில் முதலிடத்தை எட்டி கலக்கிய சாத்விக்-சிராக் கூட்டணி இந்த ஆண்டும் தங்களது அபார ஆட்டத்தை தொடருவார்கள் என்று நம்பப்படுகிறது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டோ, திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் இணைகள் களம் காணுகின்றன. அஸ்வினி-தனிஷா ஜோடி தங்களது முதலாவது சுற்றில் அமெரிக்காவின் பிரான்செஸ்கா கார்பெட்-அலிசன் லீ இணையுடன் மோதுகிறது. முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியர் யாரும் இடம் பெறவில்லை.


Next Story