பார்முலா1 மெர்சிடஸ் அணியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனின் ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு


பார்முலா1 மெர்சிடஸ் அணியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனின் ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு
x

Image Courtesy : @MercedesAMGF1 twitter

இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனுக்கு ஆண்டுக்கு ரூ.524 கோடி ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

லண்டன்,

கார் பந்தயங்களில் புகழ்பெற்ற பார்முலா1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 7 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 38 வயதான ஹாமில்டன் 2013-ம் ஆண்டில் இருந்து மெர்சிடஸ் நிறுவன அணிக்காக பந்தயத்தில் பங்கேற்று வருகிறார்.

இந்த சீசனில் மொத்தமுள்ள 22 சுற்றுகளில் இதுவரை நடந்துள்ள 13 சுற்று முடிவில் 156 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறார். களத்தில் காரை சாதுர்யமாக மின்னல்வேகத்தில் செலுத்துவதில் கில்லாடியான ஹாமில்டன் சமீபகாலமாக தடுமாற்றம் கண்டுள்ளார். கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் அவருடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேலும் 2 ஆண்டுகளுக்கு மெர்சிடஸ் அணி ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளது. 2025-ம் ஆண்டு வரை தொடர்ந்து அந்த அணிக்காக ஹாமில்டன் டிரைவராக இருப்பார். இதற்காக அவருக்கு ஆண்டுக்கு ரூ.524 கோடி ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இது முந்தைய சீசனை விட ஏறக்குறைய ரூ.104 கோடி அதிகமாகும்.

இதன் மூலம் பார்முலா1 கார்பந்தயத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பெனை சமன் செய்கிறார். மெர்சிடஸ் அணியின் இன்னொரு டிரைவரான இங்கிலாந்தின் ஜார்ஜ் ரஸ்செலின் ஒப்பந்தமும் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


Next Story