கேலோ இந்தியா விளையாட்டு போட்டி: தாங்டா போட்டியின் அரையிறுதிக்கு தமிழக வீரா்கள் தகுதி
தாங்டா போட்டியில் தமிழக வீரா் ஹேமந்த் 56 கிலோ எடைப் பிரிவிலும், மற்றொரு வீரா் கிரீஷ் ரோஷன் 60 கிலோ எடைப் பிரிவிலும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனா்
கோவை,
கேலோ இந்தியா விளையாட்டு போட்டி தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் கூடைப்பந்து போட்டிகள் நிறைவடைந்த நிலையில் தாங்டா போட்டி தொடங்கியது. மணிப்பூர் மாநிலத்தின் தற்காப்பு கலையாக தாங்டா போட்டியில் வாள் மற்றும் கேடயம் பயன்படுத்தி ஒருவருடன், ஒருவர் மோதுவர். இந்த போட்டியில் நடுவர்களாக 6 பேர் இருப்பார்கள். இவர்கள் அளிக்கும் புள்ளியின் அடிப்படையில் வெற்றி, தோல்வி நிர்ணயம் செய்யப்படுகிறது.
கோவையில் தொடங்கிய தாங்டா போட்டியில் மணிப்பூர், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா, மிசோரம் உள்ளிட்ட 16 மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களுக்கு உடல் எடை அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது.
முதல் போட்டியில் மராட்டிய வீரர் ஜெய் ஆனந்ராவ், லக் ஷயா அதியா மோதினர். இதில் ஜெய் ஆனந்த்ராவ் 33-19 என்ற புள்ளி கணக்கில் வென்றார்.
56 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் ஹேமந்த் தெலுங்கானா வீரர் கனுகுலா பிரணவ் மற்றும் டெல்லி வீரர் ஹர்ஸ் புரோஹித் ஆகியோரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல் மற்றோரு தமிழக வீரர் கிரீஸ் ரோஷன் 60 கிலோ எடைபிரிவில் தெலுங்கானா வீரர் பகாயஷ்வந்த், 2-வது போட்டியில் அசாம் வீரர் ஜேம்ஸ் ஆகியோரை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) போட்டிகள் நடக்கிறது.