தேசிய சீனியர் தடகளம் சென்னையில் தொடங்கியது: 'போல்வால்ட்' பந்தயத்தில் தமிழக வீராங்கனை புதிய சாதனை
போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனை பரனிகா புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
சென்னை,
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 14-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
போட்டியை தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். டாக்டர் பொன் கவுதம் சிகாமணி எம்.பி., இந்திய தடகள சம்மேளன தலைவர் அதில் சுமரிவாலா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா, எஸ்.என்.ஜெ.குழும தலைவர் எஸ்.என்.ஜெயமுருகன் உள்பட பலர் தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
முதல் நாளில் பெண்களுக்கான 'போல்வால்ட்' (கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீராங்கனை பரனிகா 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி கவனத்தை ஈர்த்தார். மற்ற தமிழக வீராங்கனைகள் ரோசி மீனா (4 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், பவித்ரா (3.90 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர். சாதனை படைத்த 25 வயதான பரனிகா மயிலாடுதுறையை சேர்ந்தவர் ஆவார்.
10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் மராட்டிய வீராங்கனைகள் சஞ்சிரானி பாபுராவ் ஜாதவ் (33 நிமிடம் 16.43 வினாடி) தங்கப்பதக்கமும், பிரஜக்தா காட்போலி வெள்ளிப்பதக்கமும், உத்தரபிரதேச வீராங்கனை கவிதா யாதவ் வெண்கலப்பதக்கமும் தட்டிச் சென்றனர்.
ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த கேரள வீரர் எம்.ஸ்ரீசங்கர் 8.01 மீட்டர் நீளம் தாண்டி புதிய போட்டி சாதனை படைத்ததுடன், காமன்வெல்த் போட்டிக்கான தகுதி இலக்கையும் எட்டி இறுதிசுற்றுக்கு முன்னேறினார். 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உத்தரபிரதேச வீரர்கள் அபிஷேக் பால் (29 நிமிடம் 55.51 வினாடி) தங்கப்பதக்கமும், குல்வீர் சிங் (29 நிமிடம் 55.71 வினாடி) வெள்ளிப்பதக்கமும் வசப்படுத்தினர். ராஜஸ்தான் வீரர் தர்மேந்தர் (29 நிமிடம் 55.84 வினாடி) வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இன்று 2-வது நாள் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும். இதில் இரவு 7 மணிக்கு நடைபெறும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே, தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை அதிகாரிகள் பெங்களூருவில் இருந்து வந்து முகாமிட்டுள்ளனர். அவர்கள் இந்த போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளிடம் ஊக்க மருந்து சோதனைக்கான மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புகிறார்கள்.