குத்துச்சண்டை தகுதி சுற்றில் வெற்றி: ஜாஸ்மின் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
பெண்கள் 57 கிலோ எடைபிரிவின் கால்இறுதியில் ஜாஸ்மின் லம்போரியா வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்தார்.
பாங்காக்,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை தகுதி சுற்று பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் 51 கிலோ எடை பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் சீனாவின் சுவாங்லியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதே போல் பெண்கள் 57 கிலோ எடைபிரிவின் கால்இறுதியில் தேசிய சாம்பியனான இந்தியாவின் ஜாஸ்மின் லம்போரியா, மரின் கமாராவை (மாலி) சரமாரி தாக்குதலால் நிலைகுலைய வைத்து எளிதில் வெற்றி பெற்று அரைஇறுதியை எட்டினார். வெற்றியின் மூலம் அரியானாவைச் சேர்ந்த பன்ஹால், ஜாஸ்மின் இருவரும் பாரீஸ் ஒலிம்பிக் கோட்டாவை உறுதி செய்தனர். இவர்களையும் சேர்த்து குத்துச்சண்டையில் ஒலிம்பிக்குக்கு இதுவரை 6 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே நிகாத் ஜரீன், பிரீத்தி பவார், லவ்லினா, நிஷாந்த் தேவ் ஆகியோர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.