ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியா 15 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடம்
ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 15 பதக்கங்களுடன் பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளது.
புதுடெல்லி,
ஜெர்மனியின் சூல் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் சார்பில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது.
இதில், இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளது.
இதுபற்றி இந்திய தேசிய ரைபிள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்தி குறிப்பில், 2019-ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த அனைத்து ஜூனியர் உலக கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டிகளிலும் இல்லாத வகையில் இந்தியா ஒட்டுமொத்த அளவில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளது.
இந்த பட்டியலில் தங்கம் வென்றவர்கள் வரிசையில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் சைனியம், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிளில் தனுஷ் ஸ்ரீகாந்த், ஆடவர் 25 மீட்டர் பிஸ்டலில் அமன்பிருத் சிங் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இதேபோன்று, கலப்பு குழு போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிளில் அபினவ் ஷா மற்றும் கவுதமி பனோட், 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு போட்டியில் கவுதமி, சுவாதி சவுத்ரி மற்றும் சோனம் மஸ்கார் ஆகியோரும் மற்றும் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் குழு போட்டிகளில் மேகனா சதுலா, பாயல் கத்ரி மற்றும் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
எனினும் போட்டியின் இறுதி நாளில் இந்தியாவின் ஜூனியர் துப்பாக்கி சுடுதல் வீரர்களால் பதக்க சுற்றுக்கு செல்ல முடியவில்லை.