தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா - கடைசி ஒருநாள் கிரிக்கெட் இன்று ராஜ்கோட்டில் நடைபெறுகிறது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை முதல்முறையாக முழுமையாக கைப்பற்றும் வேட்கையுடன் இந்திய அணி இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறது.
ராஜ்கோட்,
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மொகாலியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியில் முதல் 2 ஆட்டங்களில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, குல்தீப் யாதவ் ஆகியோர் திரும்புகின்றனர்.அதேசமயம் இந்த ஆட்டத்தில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிக்காக ருதுராஜ் கெய்க்வாட் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 ஆட்டங்களில் ஆடிய சுப்மன் கில், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இந்தியா பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. இதுவரை ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை முழுமையாக (ஒயிட் வாஷ்) இந்தியா வென்றதில்லை. இந்த குறையை போக்க இந்திய அணிக்கு இது நல்ல வாய்ப்பாகும்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பந்து வீச்சு திறன் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. காயத்தில் இருந்து மீண்டுள்ள மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் ஆகியோர் இந்த ஆட்டத்திற்கு திரும்புவது ஆஸ்திரேயாலியாவுக்கு வலு சேர்க்கும். இதே போல் முந்தைய மோதலில் ஆடாத கேப்டன் கம்மின்சும் களம் இறங்க உள்ளார்.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இவ்விரு அணிகளும் மோதும் கடைசி சர்வதேச போட்டி என்பதால் வெற்றியுடன் நிறைவு செய்ய வரிந்து கட்டி நிற்பார்கள். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ராஜ்கோட் மைதானத்தில் இதுவரை 3 ஒருநாள் போட்டிகள் நடந்து இருக்கின்றன. இதில் இந்தியா ஒன்றில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் கண்டு இருக்கிறது. கடைசியாக 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இருந்தது. இதில் இந்திய அணி நிர்ணயித்த 341 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 304 ரன்னில் ஆல்-அவுட் ஆகி தோற்றது. இங்கு நடந்த மூன்று ஆட்டங்களிலும் முதலில் பேட் செய்த அணி வெற்றி பெற்று இருப்பதால் இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். மேலும் பேட்டிங்குக்கு அனுகூலமான இந்த ஆடுகளத்தில் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.