'பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்' - வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை
பாரீசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை,
காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அண்மையில் நடந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி தனிநபர் பிரிவில் (சேபர்) தங்கப்பதக்கமும், அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். பதக்கங்களை வென்ற பவானி தேவி நேற்று சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பவானி தேவியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
பின்னர் பவானி தேவி நிருபர்களிடம் பேசுகையில், 'லண்டனில் நடந்த காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் 2 பதக்கம் வென்றேன். ஏற்கனவே 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உள்ளேன். ஓய்வெடுக்காமல் தொடர்ந்து பயிற்சி பெற்றதால் பதக்கங்களை வெல்ல முடிந்தது. நான் பதக்கம் வெல்வதற்கு எனது பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் உறுதுணையாக இருந்தனர்.
தமிழக அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் எனக்கு நல்ல உதவிகள் செய்து வருகின்றனர். நான் பணியாற்றும் மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ளவர்கள் நான் ஒவ்வொரு முறையும் போட்டிக்கு செல்லும் போதும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.
2024-ம் ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல விரும்புகிறேன். இது சாதாரண விஷயமல்ல. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமானதாகும். ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன். நிச்சயமாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது வாள்வீச்சு போட்டி நன்றாக பிரபலம் அடைந்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் வாள் வீச்சு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்' என்று தெரிவித்தார்.