குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வா..? வைரலாகும் செய்திகள்.. மேரி கோம் விளக்கம்
இன்னும் தனது உடற்தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக மேரி கோம் தனது விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரி கோம் (வயது 41) ஓய்வு முடிவை அறிவித்ததாக செய்தி வெளியானது.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மேரி கோம், "எனக்கு இன்னும் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் வயது வரம்பு சார்ந்த விதி காரணமாக நான் அதை தொடர முடியாது. வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்" என தெரிவித்திருந்தார். இதை மேற்கோள் காட்டி மேரி கோம் ஓய்வு முடிவை அறிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி வைரலானது.
ஆனால், ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை என்றும், தனது பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் மேரி கோம் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நான் இன்னும் ஓய்வு குறித்து அறிவிக்கவில்லை. எனது பேச்சு தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஓய்வு பெறுவது குறித்து முடிவு எடுத்தால் தனிப்பட்ட முறையில் ஊடகங்கள் வாயிலாக அறிவிப்பு வெளியிடுவேன்.
ஜனவரி 24-ம் தேதி (நேற்று) திப்ருகரில் உள்ள பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி பேசினேன். அப்போது, விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கையுடன் இன்னமும் நான் இருக்கிறேன். ஆனால், ஒலிம்பிக்கில் உள்ள வயது வரம்பு காரணமாக ஒலிம்பிக் போட்டியில் என்னால் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. இருந்தபோதும், நான் எனது விளையாட்டைத் தொடர்கிறேன், என பேசினேன்.
நான் இன்னும் எனது உடற்தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறேன். எப்போது ஓய்வு பெறுவேன் என்பதை அனைவருக்கும் முறைப்படி தெரிவிப்பேன்.
இவ்வாறு மேரி கோம் கூறியுள்ளார்.