நாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் மகிழ்ச்சி; நீரஜ் சோப்ரா


நாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் மகிழ்ச்சி; நீரஜ் சோப்ரா
x

அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.



யூஜின்,



அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் 18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 22 பேர் கொண்ட இந்திய தடகள அணி, ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா தலைமையில் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில், ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள போட்டியில் 19 ஆண்டுகளுக்கு பின் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்த போட்டி எளிதானது போன்று தெரியும்.

ஆனால், ஆண்டர்சன் 90 மீட்டர் தொலைவை கடக்க பெரிய முயற்சியை முன்னெடுத்திருக்க வேண்டும்... இந்த ஆண்டில் அவர் உலக அளவில் முன்னிலை வகிக்கிறார். 90 மீட்டரை கடந்து நல்ல முறையில் ஈட்டி எறிந்துள்ளார். கடுமையாக உழைத்திருக்கிறார் என்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கும் கூட இது நல்லது. எனக்கு நல்ல போட்டியாளர் கிடைத்திருக்கிறார் என்று சோப்ரா கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, ஒலிம்பிக் சாம்பியன் என்பதற்காக என் மீது அழுத்தம் இருந்தது போன்று நான் உணரவில்லை. 3வது முறை ஈட்டி எறிந்த பின்னர் கூட என் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. மீண்டு வந்து, வெள்ளி பதக்கம் வென்றுள்ளேன். அதனை நல்லதென்றே உணர்கிறேன். அடுத்த முறை பதக்கத்தின் நிறம் மாறுவதற்கான முயற்சியை மேற்கொள்வேன் என வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

நன்றாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வெள்ளி பதக்கம் கிடைத்த முடிவால் எனக்கு திருப்தியே. எனது நாட்டுக்காக ஒரு பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story