குடிபோதையில் போலீசார் தாக்குதல்; பதக்கங்களை திருப்பி எடுத்து கொள்ளுங்கள்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் பேட்டி


குடிபோதையில் போலீசார் தாக்குதல்; பதக்கங்களை திருப்பி எடுத்து கொள்ளுங்கள்:  மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கண்ணீர் பேட்டி
x

குடிபோதையில் போலீசார் தாக்குதல் நடத்தினர் என்றும் பதக்கங்களை திருப்பி எடுத்து கொள்ளுங்கள் என்றும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்ட பகுதியில் நேற்று இரவில் மழை பெய்ததும், படுப்பதற்கு மடிக்கும் வசதி கொண்ட படுக்கைகளை கொண்டு வர அவர்கள் முயன்று உள்ளனர்.

அப்போது, போலீசார் அவர்களை தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலரை தலையில் தாக்கி உள்ளனர். இதில் 2 பேர் காயமடைந்தனர். ஒருவர் சுய நினைவை இழந்து விட்டார். பின் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளனர்.

முன்னாள் மல்யுத்த வீரரான ராஜ்வீர் கூறும்போது, தர்மேந்திரா என்ற குடிபோதையில் இருந்த காவலர் ஒருவர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மீது தகாத வார்த்தைகளை கூறியதுடன், எங்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார் என்றார்.

காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற கீதா போகத் கூறும்போது, தனது இளைய சகோதரர் துஷ்யந்த் போகத்துக்கு தாக்குதலில் தலையில் காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து விட்டது என கூறியுள்ளார். வினேஷ் போகத் கூறும்போது, இப்படி நடத்த நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் இல்லை. எங்களை கொல்ல விரும்பினால் கொல்லுங்கள் என்று அழுதபடி கூறினார்.

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியா, நான் வெற்றி பெற்ற அனைத்து பதக்கங்களையும் அரசாங்கம் திருப்பி எடுத்து கொள்ளட்டும் என்று வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன் என கூறியுள்ளார்.

எனினும், போலீசார் யாரும் குடிபோதையில் இல்லை என டெல்லி போலீசார் இதனை மறுத்து உள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை என கூறியுள்ளனர்.

ஆனால், தகராறில் 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளனர். இந்த மோதலை தொடர்ந்து, கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, அந்த பகுதியை தடுப்பான் அமைத்து சூழ்ந்து கொண்டதுடன், ஊடகத்தினர் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக 12 ஆண்டுகளாக அந்த பதவியில் உள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வருகிறார். இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் 3 மாதங்களுக்கு பின் டெல்லி, ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் கடந்த ஏப்ரல் 23-ந்தேதி தொடங்கி மீண்டும் நடந்து வருகிறது.

இதுபற்றி டெல்லி போலீசார் சமீபத்தில் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.

பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளின் வழக்கறிஞர் நரேந்திர ஹூடா கூறும்போது, ஐ.பி.சி.யின் பிரிவு 354, 354 (ஏ), 354 (டி) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் ஒரு எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். மற்றொரு எப்.ஐ.ஆர்.ரின் நகல் எங்களுக்கு வழங்கப்படவில்லை (அது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் மட்டுமே வழங்கப்படும்) என்று கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் 2 எப்.ஐ.ஆர். பதிவாகி உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசியல் கட்சியினரும் சந்தித்து வருகின்றனர். இதன்படி, கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பொது செயலாளரான பிரியங்கா காந்தி சந்தித்து பேசினார். இதேபோன்று, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலும் அதில் பங்கேற்று பேசினார். இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷாவும் டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தில் நேற்று பங்கேற்றார்.


Next Story