தேசிய மாஸ்டர் தடகள போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியருக்கு 2 தங்கம்
தேசிய மாஸ்டர் தடகள போட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 2 தங்கம் வென்றார்.
திருச்செந்தூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கர்நாடக மாஸ்டர் தடகள சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான 42-வது தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி உதவி பேராசிரியர் என்.அருள் ரூபன், தமிழக அணி சார்பில் பங்கேற்றார்.
கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் (போல்வால்ட்) மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கப்பதக்கங்கள் வென்றார். மேலும், 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும் பெற்று தமிழ்நாட்டிற்கும், ஆதித்தனார் கல்வி நிறுவனத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர் இலங்கையில் நடைபெறும் சர்வதேச மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்கிறார். சாதனை படைத்த உதவி பேராசிரியர் அருள் ரூபனை, ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் டி.வெங்கட்ராமராஜ், செயலாளர் எஸ்.நாராயண ராஜன், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.
இக்கல்லூரியில் பி.பி.இ.எஸ்., பி.பி.எட். மற்றும் எம்.பி.எட். பயிலும் மாணவர்களில் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் மற்றும் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆர்வம் கொண்டவர்கள், உதவி பேராசிரியர் அருள் ரூபனிடம் பயிற்சி பெற விருப்பம் காட்டியுள்ளனர்.