டெல்லி: மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கான மத்திய அரசின் செலவு பட்டியல் வெளியீடு
டெல்லியில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் கடந்த 5 ஆண்டுகளில் அவர்களுக்கு மத்திய அரசு செலவு செய்த பட்டியல் விவரம் வெளிவந்து உள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. 3 மாதங்களுக்கு பின்னர், டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின்போது, சமீபத்தில் குடிபோதையில் டெல்லி போலீசார் அவர்களை தாக்கி உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், இதனை போலீசார் மறுத்தனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு விசாரணையில், 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளன மற்றும் புகார் அளித்த 7 பேருக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது என கூறி அந்த வழக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.
எனினும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இதுபற்றி கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். போராட்டம் தொடரும். அனைத்து வாய்ப்புகளையும் வெளிப்படையாகவே நாங்கள் வைத்திருக்கிறோம். மூத்த வீரர்களிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு வருங்கால நடவடிக்கைகளை பற்றி முடிவு செய்வோம் என கூறினர்.
டெல்லி உள்பட நாடு முழுவதும், மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த உள்ள சூழலில், ஜந்தர் மந்தரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக 12 ஆண்டுகளாக அந்த பதவியில் உள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங் பா.ஜ.க. எம்.பி.யாகவும் இருந்து வருகிறார். இதுதவிர, கூட்டமைப்பின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவது மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட விசயங்களை வலியுறுத்தியும் டெல்லி, ஜந்தர் மந்தரில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.
இதுபற்றி டெல்லி போலீசார் சமீபத்தில் கூறும்போது, மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம். ஒரு சிறுமி உள்பட மொத்தம் 7 வீராங்கனைகள், பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக புகார் அளித்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களை போலீசார் விரைவில் பதிவு செய்வார்கள்.
பிரிஜ் பூஷண் சரண் சிங், இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் கூட மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டு உள்ளார் என குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது என டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தலைவர் பி.டி. உஷா தலைமையில், மேற்பார்வை குழு ஒன்றும் மற்றும் அவர்களது போராட்டம் பற்றிய தினசரி நடவடிக்கைகளை கவனிக்கும் கண்காணிப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மத்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய விளையாட்டு கழகம் மற்றும் ஊடகங்கள் சார்பில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் மல்யுத்த போட்டிகளுக்கு மத்திய அரசு செலவழித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் மல்யுத்த போட்டிகளுக்கு என்று அரசு ரூ.150 கோடி செலவிட்டு உள்ளது. நிபுணர்களின் வழிகாட்டுதலின்பேரில், வெளிநாடுகளுக்கு அவர்களை பயிற்சிக்காக அனுப்பிய வகையில், ரூ.63 கோடி செலவிடப்பட்டு உள்ளது.
ரூ.2.5 கோடி செலவில், நவீன தொழில்நுட்பம் சார்ந்த உபகரணங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி ஆகியவை மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நிபுணர்களுக்கு அலவன்ஸ் தொகையாக ரூ.15 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதுதவிர, உள்ளூர் பயிற்சிக்காக ரூ.35 கோடியும், தேசிய அளவிலான பயிற்சிக்காக ரூ.25 கோடியும், சிறப்பு ஆதரவு வகையில், ரூ.7 கோடியும் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ரூ.2 கோடியும் அரசு செலவிட்டு உள்ளது.
வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் பூனியா ஆகியோரின் தனிப்பட்ட செலவுகளுக்காக முறையே, ரூ.2.16 கோடி மற்றும் ரூ.2.58 கோடி செலவிடப்பட்டு உள்ளது என அந்த பட்டியல் விவரம் தெரிவிக்கின்றது. இந்த் நிலையில், டெல்லியில், இன்று இரவு 7 மணியளவில், மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி செல்லவும் அவர்கள் முடிவு செய்து உள்ளனர்.