உலக குத்துச்சண்டை போட்டியில் தீபக், ஹூசாமுதீன், நிஷாந்த் அரைஇறுதிக்கு முன்னேற்றம் - 3 பதக்கத்தை உறுதி செய்து அசத்தல்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது.
தாஷ்கென்ட்,
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் தீபக் போரியா, கிர்கிஸ்தானின் நூர்ஜித் துஷ்பாவை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தீபக் போரியா 5-0 என்ற கணக்கில் நூர்ஜித்தை துவம்சம் செய்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல் 57 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் மற்றொரு இந்திய வீரரான முகமது ஹூசாமுதீன் கடும் சவாலான மோதலில் 4-3 என்ற கணக்கில் பல்கேரியாவின் டியாஸ் இபானிஸ்சை சாய்த்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
மேலும் 71 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் தேசிய சாம்பியனான 22 வயது நிஷாந்த் தேவ் அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற கணக்கில் கியூபாவின் ஜார்ஜ் குல்லாரை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். தீபக் போரியா, ஹூசாமுதீன், நிஷாந்த் தேவ் ஆகியோர் அரைஇறுதியை எட்டியதன் மூலம் நடப்பு உலக போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 3 வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.
இது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும். இதற்கு முன்பு இந்தியா ஒரு உலக போட்டியில் 2 பதக்கம் வென்றதே அதிகபட்சமாகும். அதாவது 2019-ம் ஆண்டு போட்டியில் இந்திய வீரர்கள் அமித் பன்ஹால் வெள்ளிப்பதக்கமும், மனிஷ் கவுசிக் வெண்கலப்பதக்கமும் வென்றதே சிறந்த செயல்பாடாகும்.
முந்தைய உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா சார்பில் விஜேந்தர் சிங் (2009-ம் ஆண்டு) வெண்கலமும், விகாஸ் கிருஷ்ணன் (2011) வெண்கலமும், ஷிவ தபா (2015) வெண்கலமும், கவுரவ் பிதுரி (2017) வெண்கலமும், அமித் பன்ஹால் (2019) வெள்ளியும், கவுசிக் (2019) வெண்கலமும், ஆகாஷ் குமார் (2021) வெண்கலமும் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.